மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பிப்பதற்கு எனக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த படம் "மணிச்சித்ர தாளு". மதுமுட்டம் எழுத பாசிலின் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா தோன்றி நடித்த அப்படம் 1993 இல் வெளியாகி ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைக் கொடுத்த படம். இன்று வரை எனக்கு மணிச்சித்ரதாளு வோடு சந்திரமுகியை ஒப்பிடமுடியவில்லை.
மணிச்சித்ரதாளுவின் பாடல்கள் எல்லாமே பிரமாதம். ஜேசுதாசுக்கு கூட விருதைக் கொடுத்திருந்த அப்பாடல்களின் இசை எம்.ஜி.ராதாகிருஷ்ணன்.
இப்படம் கன்னடத்துக்குத் தாவிய போது விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அர்விந்த், ஷோபனா நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் "ஆப்தமித்ரா" என்று வெளியாகி கன்னா பின்னாவென்று ஓடியதைப் பார்த்து குமாரசாமி கெளடாவே பயந்திருப்பார். கன்னடத்தில் இசை குரு கிரண்.
பின்னர் தமிழுக்கும் தெலுங்குக்கும் இப்படம் தாவியபோது வித்யாசாகர் "ரா ராவை" மட்டும் குருகிரணிடம் பங்கு போட்டுக் கொண்டார்.
இந்தப் படங்களின் பாடல்களை ஒரே நேரத்தில் காணொளியாகத் தரவேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். என் எண்ணவோட்டத்தை ஒத்து என் றேடியோஸ்பதி வலைப்பதிவில் ஐயப்பன் கிருஷ்ணன் என்ற பதிவர் மணிச்சித்ர தாளுவில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" பாட்டைக் கேட்டிருந்தார். இதை அனுபவியுங்கள் ;))
மலையாளத்தில் வந்த "மணிச்சித்ர தாளு", "ஒரு முறை வந்து பார்ப்பாயா" என்று பாடும் காட்சி
கன்னடத்தில் வந்த " ஆப்த மித்ரா" தெலுங்குப் பாட்டுக்கு ஆடிப் பாடும் காட்சி
தமிழில் வந்த "சந்திரமுகி" தெலுங்குப் பாட்டு்க்கு ஆடிப் பாடும் காட்சி
தெலுங்கில் மொழி மாற்றம் செய்த "சந்திரமுகி" தமிழ் பேயாட்டம் ஆடும் காட்சி
BHOOL BHULAIYA என்ற பெயரில் ப்ரீதம் இசையில் ஹிந்தி பேசப் போகும் இப்படத்தின் ட்ரெய்லர்
திரையுலகில் மளமளவென்று சிலருக்கு வாய்ப்புக்கள் வந்து கொட்டும். அதுவும் கிடைத்த வாய்ப்புக்கள் எல்லாமே குறிப்பிடத்தக்க, சொல்லிக் கொள்ளத் தக்கதாக வந்தது நடிகர் விஜயனுக்கு. ஆனால் அதை அனுபவிக்கத்தான், அவருடைய குறுகியகாலச் சந்தோஷங்கள் இடங் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ் சினிமாவுலகில் மீளக் கால் பதித்தபோது ஒரு வாரப் பத்திரிகைக்காகத் தன்னையே நொந்து கொண்டு நடிகர் விஜயன் கொடுத்த பேட்டி இப்போது நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து வருடா வருடம் படங்களில் நடித்துக் குவித்தவர், ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருந்து மீண்டு(ம்) வந்தார்.
உதிரிப்பூக்கள், நிறம் மாறாத பூக்கள், தனி மரம், விடுகதை ஒரு தொடர்கதை, பசி என்று அவருக்குத் தனி முத்திரை கொடுத்த படங்களின் பட்டியல் நீளும். மலையாளத் திரையுலகில் கூட அவருக்கென்று ஒரு இடமுண்டு. இவர் நடிகராக மட்டுமன்றி திரைக் கதாசிரியராகவும் இருந்திருக்கின்றார். அண்மையில் மறைந்த விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரையில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்"
வழக்கம் போல நல்லப்பதிவு அதுவும் , தற்போது மறைந்த விஜயன் அவர்களின் நினைவாக போட்டிருப்பது ஒரு கலைஞனுக்கான அஞ்சலியாகவும் அமையும், நன்றி!
//விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.//
உண்மை தான் போதையின் பாதையில் வழி தவறியவர் தான், திரை உலகில் அனேகமாக அனைவரும் மது அருந்துவார்கள், ஆனால் அது கேமிராவுக்கு பிறகே , இவர் படப்பிடிப்பிலே மது அருந்திவிட்டு தான் நடிப்பார் எனவும் செய்தியுண்டு, மேலும் சரியான காலத்தில் படத்தை முடிக்க உதவாமல் பல சமயங்களில் இழுப்பார் எனவும் கேள்வி அதனாலேயே பட வாய்ப்புகள் போயிற்று.
இதனாலேயே திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாமல் போயிற்று.உணவுக்கே நண்பர்களை எதிர்ப்பார்த்து தான் வாழ்வதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்!அவ்வப்போது கிடைக்கும் சிறிய பாத்திரங்கள் மூலம் அப்படி என்ன பிரமாதமான வருவாய் வந்திருக்கும்.
விஜயனின் படங்கள் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம், சுஜாதா என்றொரு படம், அதில் "நீ வருவாய் என நான் இருந்தேன்" என்ற பாடலும் உண்டு, இதன் கதை கூட விஜயன் எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம் ஆனால் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
காஜா இயக்கத்தில் வந்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதையும்" இவரின் நல்ல படங்களில் ஒன்று. இப்படத்தின் பாடலொன்று இன்றிரவு றேடியோஸ்பதியில் வரவிருக்கின்றது.
பதிவின் தலைப்பைப் பார்த்து வித்தியாசமான நினைப்போடு வருபவர்கள் திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க ;))
கன்னடத்தில் தற்போதுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் உபேந்திரா. ஆனாலும் இந்த ஆளு ஓவரா கிறுக்குத்தனமான வேலைகளைச் செய்வதில் நடிகர் பார்த்திபனின் ஜெராக்ஸ் என்றே சொல்லி விடலாம். படத்தின் தலைப்பிலோ அல்லது கதையிலோ மனுஷன் ஏதாவது செய்து விடுவார். தமிழில் வந்த "தேவர் மகன்"படத்தை "தாண்டகே தக்கா மகா" என்றும், "அண்ணாமலை" படத்தை "கோகர்ணா" என்றும், "ரத்தக்கண்ணீர்" படத்தை "ரத்தக் கண்ணீரு" என்றும், "பிதாமகன்" படத்தை "அனாதரு" என்றும் எடுத்தவர்.காவிரியைக் காதலியாக உருவகப்படுத்தி கன்னட ஆளாகத் தானும் , தமிழ் ஆளாகப் பிரபுதேவாவையும் நடிக்க வைத்து என்ற H2O பெயரில் எடுத்துச் சொதப்பியவர்.
பத்து வருசங்களுக்கு முன் இவர் இயக்கி நடித்த திரைப்படமான A ஏனோ என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. புதுமையான வகையில் காட்சிகளும் கதையும் சொல்லப்பட்டிருந்தது. கன்னடத்தில் அப்போது வசூலை வாரியிறைத்த படமும் கூட. அது பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்னும் அடிக்கடி என்னை முணு முணுக்க வைக்கும். அதையே இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடலை குருகிரண் இசையில் ராஜேஷ் கிருஷ்ணன் பாடியிருக்கின்றார். 2001 பெங்களூருக்கு நான் முதல் பயணம் மேற் கொண்ட போது இந்தப் படத்தின் பாடல் காசெட்டை எப்படி வாங்குவது என்று யோசித்துப் பின் கைவிட்ட முயற்சியும் தற்போது நினைவுக்கு வருகின்றது. சரி, பாட்டைப் பாருங்கள், உங்களுக்கும் பிடித்திருக்கிறதா சொல்லுங்கள்.
ஓ குலாபியே பாட்டைக் கேட்டிருக்கேன். கன்னடத்தில் பார்க்கவில்லை. தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் மீள நடித்து ஓம் என்று தமிழிலும் வந்தது அல்லவா? நிஜ தாதாக்களையே நடிக்க வைத்திருப்பார்.
தமிழ் சாயம் பூசியதைப் பார்த்திருக்கிறேன். தேடிப் பார்த்துக் கிடைத்தால் கன்னடப் பாட்டைத் தருகின்றேன்.
ஏ திரைப்படம் பயங்கர வெற்றி பெற்ற படம். உபேந்திராவுக்குப் பெருவாழ்வு குடுத்த படம். அப்ப இருந்த முதல்வர் வீரேந்திர பாட்டீலைக் கிண்டலிச்சிருந்தாருன்னும் சொல்லுவாங்க. படத்தத் தமிழிலும் டப் செஞ்சாங்களே. ஆனா யாரும் கண்டுக்கலை.
பிரியங்கா திரிவேதின்னு ஒரு நடிகை தமிழ்ல ஒன்னு ரெண்டு படத்துல நடிச்சாங்கள்ள...அவங்கதான் உபேந்திராவோட மனைவி.
கன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.
பிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;) //
பண்ணினாரே. :) அப்ப பெங்களூர்லதான இருந்தேன். ரவிச்சந்திரன் ரசிகர்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? பிரியங்காவொட கொழந்தை ரவிச்சந்திரனைப் போல இருக்குன்னு!!!!!!!!!!!! அந்த அளவுக்கு ரவிச்சந்திரன் ரசிகர்களுக்கும் உபேந்திரா ரசிகர்களுக்கும் ஆகாது.
நடிகை சுமித்ராவின் கணவர், மற்றும் நடிகை உமாவின் அப்பா தான் முன்னாபாய் படத்தை உப்பிதாதா MBBS என்று உபேந்திராவை வைத்து போன வருசம் எடுத்திருந்தார், படம் உப்புமா தானாம்.
போன வருஷம் கன்னடத்தில் சொல்லிக்கொள்ளத் தக்க ஹிட்டடித்தவை ஆட்டொகிராப் படத்தின் தழுவல், சுதீப் நடித்த மை ஆட்டோகிராப், மற்றும் ராஜ்குமார் மகனின் "யோகி"
மலையாளத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் திரு ரவீந்திரன். இவர் கடந்த ஆண்டு காலமாகி விட்டார். ஆனால் இவரின் பாடல்கள் என்றும் இவரின் நினைவை உயிர்ப்பிக்கும். அதற்கு உதாரணமாக இன்று இரண்டு மலையாளப் பாடல்களைத் தருகின்றேன். அவை நீங்கள் தமிழில் அடிக்கடி கேட்ட "ரசிகன் ஒரு ரசிகை" என்ற சத்யராஜ், அம்பிகா நடிப்பில் வந்த படப்பாடலான " பாடி அழைத்தேன், உன்னை இதே தேடும் நெஞ்சம்" என்ற பாடலின் மூலப் பாட்டாகும்.
மலையாளத்தில் 1981 ஆம் ஆண்டு "தேனும் வயம்பும்" என்ற பெயரில் பிரேம் நசீர், மோகன் லால், நெடுமுடி வேணு, சுமலதா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வந்த இப்பாடல்களைக் கண்டு களியுங்கள்.
தமிழில் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தை இயக்கியிருந்தவர், தற்போது நகைச்சுவை நடிகனாக வலம் வரும் பாலு ஆனந்த்
இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மலையாளத்தில் ஜானகி பாடும் பாடலை முதலில் தருகின்றேன். பாடல் காட்சியையும் பாருங்கள், எவ்வளவு அழகுணர்ச்சியோடு படமாக்கப் பட்டிருக்கின்றது. (இந்தப் பாடலை மட்டும் இரண்டு முறை கிளிக்கி You tube பக்கம் சென்ற பின் பார்க்கவும்)
மலையாளத்தில் ஆண் குரலில் ஒலிக்கும் பாடலில் தோன்றி நடிக்கின்றார் நெடுமுடி வேணு
//Anonymous said... can u identify the begining of this song?
"Vanchi magal koonthal kalanthirukka, vandhu thodum un kaigal vagideutkka, bothai kondu poo azhakka, thedi vandhu then edukka"//
வணக்கம் நண்பரே
நீங்கள் கேட்ட பாட்டு " இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும்" என்று ஆரம்பிக்கும். படத்தின் பெயர் இளமைக் காலங்கள். அந்தப் படத்தில் "ஈரமான ரோஜாவே" என்று தொடங்கும் பாட்டும் இருக்கின்றது. ஆனால் "ஈரமான ரோஜாவே" வேறு படம். இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை இசை இளையராஜா
தேனும் வயம்பும் வாயில் தூவும் வானம்பாடி....இது மலையாள வரிகள். ஒரே ஒரு எழுத்து மட்டும் மாத்துனா தமிழ். தேனும் வசம்பும் வாயில் தூவும் வானம்பாடி....அழகான கவித்துவமான வரிகள். இதுல இருக்குற கவிதை பாடி அழைத்தேன் வரிகள்ள இல்ல.
வசம்பு குழந்தைகளுக்கு உரசி ஊட்டுவாங்க. தூத்துக்குடி ஓதுவார் கடைல கிடைக்கும்.
ரவீந்திரன் ஒரு இனிய கலைஞர். சமீபத்தில் இவருடைய இசையில் வந்த அம்மகிளிக்கூடு படத்துல வர்ர ஹ்ருதய கீதமாய் பாட்டு எனக்கு மிகமிகப் பிடித்த பாட்டு. http://www.youtube.com/watch?v=JlFNX9D0blI இதைக் கேட்கும்படி பரிந்துரைக்கிறேன்.
நான் பாடலை ஒலியேற்றினாலும் ஒளியேற்றினாலும் உங்கள் கருத்துத் தான் எப்போதுமே அதற்கு மெருகூட்டுக்கின்றது. தேனும் வயம்பும் என்ற வரிகளில் "வயம்பு" என்றால் என்ன என்று தேடிக்கொண்டிருந்தேன். வசம்பு தெரிந்தும் கூட இப்படிப் பொருத்திப் பார்க்கவில்லை.
மற்றப்படி பாட்டு வரிகள் தமிழில் எத்தனையோ படி கீழிறங்கியே இருக்கின்றது. மலையாளப் பாட்டுக்கு கேரள அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பிஜு திருமலாவுக்குக் கிடைத்திருப்பது மேலுமொரு அங்கீகாரம்.
லகான் என்ற திரைப்படம் எடுத்ததன் மூலம் இந்தியாவைத் தாண்டிப் பேசப்பட்டவர் Ashutosh Gowarikar, தொடர்ந்து இவர் எடுத்த திரைப்படம் தான் "ஸ்வதேஷ்". 2004 இல் வெளியாகிய இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரகுமான்.
படித்து விட்டு வெளிநாட்டுக்கும் பெயரும் இளைஞர்களைச் சொந்த நாட்டையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கப்பா என்று போதித்த திரைப்படம். ஷாருக்கான், நாசாவில் வேலை பார்க்கும் இளைஞனாக அற்புதமாக நடித்திருந்தார். புலம்பெயர்ந்து சொந்த நாட்டை விட்டு விலகி ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இப்படம் இன்னும் விசேசமாகப் பிடிக்கும்.
அதனாலோ என்னவோ இதன் தமிழ்ப்பதிப்பு "தேஸம்" என்ற பெயரில் கவிஞர் வாலி அனைத்துப் பாடல்களும் எழுத, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்படத்தில் வரும் "உந்தன் தேசத்தின் குரல்" என்ற பாடல் இன்றும் நம்மவர் பலருக்குத் தேசிய கீதம் தான்.இப்பாடலின் ஹிந்தி வடிவத்தை இங்கே தருகின்றேன்.
நல்லை ஆதீனத்துக் குருமகா சந்நிதானம் அவர்கள், நேற்று செப்டெம்பர் 18 ஆம் திகதி சிங்கப்பூர் சிறீ செண்பக விநாயகர் ஆலயத்தில் வழங்கிய ஆன்மீகப் பேச்சின் காணொளி இணப்பை இங்கே தருகின்றேன்.
பிரபா! ஒலிப்பதிவு அனுபவிக்கக் கூடிய தெளிவில்லை. இவர் உரை முதல் முறையாகக் கேட்கிறேன்.அருளுரை,ஆத்மீகவுரை இவ்வளவு வேகமாக எவ் எம் வானொலி அறிவிப்பாளர்கள் போல் இடை வெளியின்றி இருக்கக் கூடாதென்பது என் அபிப்பிராயம். முத்தியடைந்த ஆதீன கர்த்தா(மணி ஐயர்) நினைவு வந்தது.அவர் அருளுரையின் அழகே தனி...இனி வரும் ஆத்மீகவாதிகளிடம் அதைப் பெற முடியாது போலும்..வாரியார்..மணிஐயருடன் போய்விட்டுது போல்... அடுத்து...முத்தியடைந்த ஆதீனகர்த்தா( மணி ஐயர்) கோவிலுள் ஆசனத்தில் அமர்ந்ததை நான் கண்டதில்லை. அவர் கடைசிக் காலத்திலும் கூட... இவர் ஏன்?? இப்படிச் செய்தார்...புரியவில்லை. விரல் விட்டெண்ணக்கூடியவர்கள்..இளைஞர்களைக் காணவில்லை...கட்டையில் போகும் வயதில் உள்ள என் போன்றோருக்கா?? இவர் உரை ஆற்றுகிறார்... இளைஞர்களுக்குத் தேவையில்லையா??அல்லது பகுத்தறிவாளர்கள் ஆகிவிட்டார்களா?? எல்லாம் சிவமயமே.. காணொளியாக இவரைக் காணவைத்ததற்கு நன்றி!
பிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது. தான் எதிர்பாக்கும் இந்த விஷயம் கிடைக்காத பட்சத்தில் பெரும் உளவியல் தாக்கத்துக்கு அது ஆளாகின்றது. இதுவே தொடர்ந்து கொண்டு போகும் போது ஒரு நிலையில், தன் பெற்றோரை வெறுத்து அது தன் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது. இந்த உளவியற் சிக்கலின் ஆரம்பப படிநிலையை வெகு அழகாகக் காட்டுகின்றது பிஞ்சுமனம்.
குறும்படத்துக்கு அச்சாணி போன்றது நல்ல கமராக்கோணங்களும், திறமையான எடிட்டிங்கும். அதற்குச் சான்று இப்படம். கதையின் முக்கிய பாத்திரத்தையும், அது சொல்லும் சேதிகளையும் மையப்படுத்தி வெகு அழகாக நகர்கின்றது கமரா. இப்படத்தில் வந்த காட்சிகளின் அழகியல் இப்படியிருக்கின்றது. இந்தப் பிள்ளையின் சித்திரக்கீறல்களை சலனப்படுத்துகின்றது தன் தாய் தங்கையோடு விளையாடும் விளையாட்டு. பாருங்கள் அந்தக் காட்சியில் கமரா அந்தக் காட்சியை மையப்படுத்தி மெதுவாக நகர்கின்றது. தன் தாயின் கவனம் தன் மேல் பதியாத வேளை தன் அழகான சித்திரவேலையை வேண்டாவெறுப்பாக வட்டமிட்டு ஒதுக்குகின்றது. தாய் தங்கையின் விளையாட்டுக்குள் தானும் நுளைந்து வெறுப்புடன் திரும்புகின்றாள். தன் படுக்கையில் சாய்ந்து ஓரக்கண்ணால் தன் தாயுடன் இருக்கும் படத்தைப் பார்க்கின்றது. தன் தாயின் கவனம் இறுதியாகக் கிடைத்த திருப்தியில் அமைதியாகிறாள் அந்தச் சிறுமி.
சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள். "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." என்ற கருப்பொருளில் வந்த பிஞ்சுமனம்( Tender heart ) என்ற குறும்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்: நடிப்பு: காவ்யா சிவன், சிறீதர் ஐயர், தீபா ராஜகோபால் திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி, சங்கரபாண்டி சொர்ணம், வெங்கடேஸ் கிருஸ்ணசாமி , எம்.பீ.சிவா, மற்றும் அஜீவன் எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால்
கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.
குறும்படத்தைப் பார்ப்பதற்கு இங்கே சுட்டவும்: பிஞ்சு மனம்
விஜயன் மறைவு மிக்க வருத்தத்தை கொடுத்தது.
நல்லதொரு நடிகர்.
எடுத்த பாத்திரங்களின் பரிணாமங்களை அறிந்து பூரணமாகப்
படைத்துக் காட்டினார்.
அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
நன்றி பிரபா.