திரையுலகில் மளமளவென்று சிலருக்கு வாய்ப்புக்கள் வந்து கொட்டும். அதுவும் கிடைத்த வாய்ப்புக்கள் எல்லாமே குறிப்பிடத்தக்க, சொல்லிக் கொள்ளத் தக்கதாக வந்தது நடிகர் விஜயனுக்கு. ஆனால் அதை அனுபவிக்கத்தான், அவருடைய குறுகியகாலச் சந்தோஷங்கள் இடங் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ் சினிமாவுலகில் மீளக் கால் பதித்தபோது ஒரு வாரப் பத்திரிகைக்காகத் தன்னையே நொந்து கொண்டு நடிகர் விஜயன் கொடுத்த பேட்டி இப்போது நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து வருடா வருடம் படங்களில் நடித்துக் குவித்தவர், ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருந்து மீண்டு(ம்) வந்தார்.
உதிரிப்பூக்கள், நிறம் மாறாத பூக்கள், தனி மரம், விடுகதை ஒரு தொடர்கதை, பசி என்று அவருக்குத் தனி முத்திரை கொடுத்த படங்களின் பட்டியல் நீளும். மலையாளத் திரையுலகில் கூட அவருக்கென்று ஒரு இடமுண்டு. இவர் நடிகராக மட்டுமன்றி திரைக் கதாசிரியராகவும் இருந்திருக்கின்றார். அண்மையில் மறைந்த விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரையில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்"
வழக்கம் போல நல்லப்பதிவு அதுவும் , தற்போது மறைந்த விஜயன் அவர்களின் நினைவாக போட்டிருப்பது ஒரு கலைஞனுக்கான அஞ்சலியாகவும் அமையும், நன்றி!
//விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.//
உண்மை தான் போதையின் பாதையில் வழி தவறியவர் தான், திரை உலகில் அனேகமாக அனைவரும் மது அருந்துவார்கள், ஆனால் அது கேமிராவுக்கு பிறகே , இவர் படப்பிடிப்பிலே மது அருந்திவிட்டு தான் நடிப்பார் எனவும் செய்தியுண்டு, மேலும் சரியான காலத்தில் படத்தை முடிக்க உதவாமல் பல சமயங்களில் இழுப்பார் எனவும் கேள்வி அதனாலேயே பட வாய்ப்புகள் போயிற்று.
இதனாலேயே திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாமல் போயிற்று.உணவுக்கே நண்பர்களை எதிர்ப்பார்த்து தான் வாழ்வதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்!அவ்வப்போது கிடைக்கும் சிறிய பாத்திரங்கள் மூலம் அப்படி என்ன பிரமாதமான வருவாய் வந்திருக்கும்.
விஜயனின் படங்கள் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம், சுஜாதா என்றொரு படம், அதில் "நீ வருவாய் என நான் இருந்தேன்" என்ற பாடலும் உண்டு, இதன் கதை கூட விஜயன் எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம் ஆனால் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
காஜா இயக்கத்தில் வந்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதையும்" இவரின் நல்ல படங்களில் ஒன்று. இப்படத்தின் பாடலொன்று இன்றிரவு றேடியோஸ்பதியில் வரவிருக்கின்றது.
விஜயன் மறைவு மிக்க வருத்தத்தை கொடுத்தது.
நல்லதொரு நடிகர்.
எடுத்த பாத்திரங்களின் பரிணாமங்களை அறிந்து பூரணமாகப்
படைத்துக் காட்டினார்.
அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
நன்றி பிரபா.