தமிழ், மலையாளம், தெலுங்கு, உலக சினிமா என்று மானாவாரியாக ரவுண்டு கட்டிப் படம் பார்க்கும் நான் ஹிந்திப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. ஓம் சாந்தி ஓம் ஹிந்திப் பட டிவிடி ஐ வாங்கும் போது போனஸாக கிடைத்த படம் ".Heyy Babyy". அக்க்ஷய்குமார், வித்யா பாலன், பர்தீன் கான், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்த இப்படத்தின் இயக்கம் சஜீத் கான்.
அவுஸ்திரேலியாவில் வாழும் மூன்று மன்மதக் குஞ்சுகள் காலை, மதியம், இரவு என்று ஆடை மாற்றுவது போல் பெண் ஜோடி மாற்றுவது இவர்களின் முழு நேரத்தொழில். நாளொரு காதலியும் பொழுதொரு களியாட்டமாக வாழும் இவர்கள் அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை அனாதரவாகக் கிடக்கின்றது. ஆரம்பத்தில் தங்கள் களியாட்ட வாழ்வைக் குலைக்கும் குட்டிச் சாத்தானாக இந்தக் குழந்தையை எடைபோடும் இவர்கள், எதிர்ப்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து தம் வாழ்வை முற்றிலும் மாற்றி இந்தக் குழந்தைக்கு ஏஞ்சல் என்று பெயரிட்டு இந்த மூவருமே அங்கீகரிக்கப்படாத சுவீகாரத்தந்தையாக மாறுகின்றார்கள்.
தமது கெட்டபழக்கங்களை நிறுத்தி இந்தக் குழந்தையே உலகமாகி விடுகின்றார்கள். ஆனால் திடீரென நிகழும் சம்பவமும் அதைத் தொடரும் நிகழ்வுகளும் இந்தக் குழந்தையை இவர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரியும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அப்போது தான் இன்னொரு அதிர்ச்சியும் இம்மூவரில் ஒருவருக்கு ஏற்படுகின்றது. எல்லாச் சிக்கலும் கழன்று, இக்குழந்தை இவர்கள் கையில் கிடைத்ததா என்பதே இக்கதைச் சுருக்கம்.
இதே போல் நூற்றுச் சொச்சம் கதைகள் வெவ்வேறு மொழியில் வந்திருந்தாலும், பொருத்தமான பாத்திரத் தேர்வு, இசை, நடிப்பு, படம் முழுக்க விரவியிருக்கும் நகைச்சுவை என்று முழுமையான பொழுதுபோக்குச் சித்திரமாகவே இருக்கின்றது.
குட்டிப் பெண் ஏஞ்சலாக வரும் ஜொஹைனாவின் மழலைத்தனத்தை ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
வித்யாபாலனை ஏழு நாட்களுக்குள் ஒரு உருப்படியான கணவன் கிடைக்காமல் செய்ய மூன்று நண்பர்கள் செய்யும் கோல்மால் வேலைகள் வயிறு குலுங்க வைப்பவை.
சங்கர் எசான் லாய் இன் கூட்டு இசையும், Meri Duniya மற்றும் Mast Kalandar போன்ற பாடல்களும் பரவசமூட்டுகின்றன. நாயகர்களுடன் போமன் இரானி, கெஸ்டாக ஒரு பாடலில் வரும் அனுபம் கெர், ஷாருக்கானும் கலக்கியிருக்கின்றார்கள்.
டிசம்பர் விடுமுறையில் நன்றாக மனம் விட்டுச் சிரித்துப் பார்த்து மகிழ வேண்டிய ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் இது. பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
நான் நூற்றுச் சொச்சம் முறை பார்த்து/கேட்டு விட்ட Meri Duniya பாட்டு
அண்ணாச்சி நீங்களே சொல்லிட்டீங்க!!
பாத்துருவோம் படத்தை!! B-)