"காற்றில் எந்தன் கீதம்" இந்தப் பாடல் 29 வருஷங்களுக்கு முன்னர் "ஜானி" திரைப்படத்தில் வந்த, இன்றும் ரசிகர் மனதை விட்டு நீங்காது ஆணி அடித்தது போல நிற்கும் பாடல். இளையராஜாவைக் கேட்டு வளராத அடுத்த தலைமுறை கூட இந்தப் பாடலை நேசம் கொண்டு பாடிப் பரவசம் அடையும் அளவுக்கு பாட்டின் மெட்டும், பாடிய ஜானகியின் குரல் இனிமையும், பின்னணியில் கலக்கும் இசையும் வியாபித்து நிற்கும்.
ஆர்ப்பாட்டமாக மட்டுமல்ல அமைதியான தென்றலாகக்கூடத் தன்னால் பாடி வைக்க முடியும் என்று எஸ்.ஜானகி நிரூபித்த பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இந்தப் பாடல். கஸல் வடிவில் பொருத்திப் பார்க்கக் கூடிய இந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடிய போது இந்தக் குரலே அவருக்கு அந்நியமான ஒரு வடநாட்டுப் பாணி போல இருக்கும். வளைந்து நெளிந்து போகும் இந்த குரல் கொடுக்கும் உருக்கம் கேட்போரின் ஊனினை உருக்க வல்லது. கூடவே பின்னணியாய் மெல்லிய மழைச்சாரல் போல வரும் இசை குரலோடு சேர்ந்து ஏக்கத்தைக் காட்டுகின்றது கண் முன்னே. காதல் வயப்பட்ட உள்ளம் மழைதேடி நனைந்து ரசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.
"காற்றில் எந்தன் கீதம்" மொழி கடந்தும் ரசிக்கப்படுகின்றது என்பதற்கு இங்கே அம்ருதா டிவியில் வந்த இசைப்போட்டிகளில் பாடிய பாடகிகளில் ஒளித் துண்டங்களும், கூடவே மலையாளத்தின் தலைசிறந்த புதிய தலைமுறை இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன் இப்பாடலைப் பற்றிச் சிலாகிக்கும் கருத்தையும் தந்திருக்கின்றேன்.
Aur Ek Prem Kahani என்ற ஹிந்தித் திரைப்படத்தினை பாலுமகேந்திரா இயக்கியபோது ராஜாவிடம் பழைய மெட்டுக்களைக் கேட்டுப் பயன்படுத்திக் கொண்டார். அதிலும் "காற்றில் எந்தன் கீதம்" வந்து கலந்தது.
"காற்றில் எந்தன் கீதம்" பாமரனை மட்டுமல்ல சங்கீத விற்பன்னர்களையும் கவரும் அதி அற்புதமான பாடல்.
மூலப்பாடலைப் பார்த்து ரசிக்க
அம்ருதா டிவியில் Super Star Junior 2 இல் அனகா பாடும் "காற்றில் எந்தன் கீதம்"
அம்ருதா டிவியில் Super Star 2 நிகழ்ச்சியில் பத்ரா பாடும் "காற்றில் எந்தன் கீதம்"
இந்தப் பாடலை இசையமைத்த ராஜாவின் காலடியில் விழுந்து வணங்குவேன் என்று சொல்லும் மலையாள இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன்
Aur Ek Prem Kahani திரைப்படத்தில் இதே மெட்டை வைத்து ஆஷா போன்ஸ்லே ஐ பாட வைத்திருக்கிறார் இளையராஜா
//வளைந்து நெளிந்து போகும் இந்த குரல் கொடுக்கும் உருக்கம் கேட்போரின் ஊனினை உருக்க வல்லது. கூடவே பின்னணியாய் மெல்லிய மழைச்சாரல் போல வரும் இசை குரலோடு சேர்ந்து ஏக்கத்தைக் காட்டுகின்றது கண் முன்னே. காதல் வயப்பட்ட உள்ளம் மழைதேடி நனைந்து ரசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.///
அண்ணன், பல நாட்களுக்கு பிறகு நானும்தான் ஏர்டெல் சுப்பர் சிங்கர் யூனியர் 2 நிகழ்ச்சி பார்த்ததிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக இந்தப்பாடலை பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் அறையிலும் அலுவலகத்திலுமாக...
அடுத்தடுத்த தலை முறைகளும் ரசித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி பல இடங்களிலும் தேட அவசியமில்லாமல் இலகுவாக கிடைக்கிற இந்தப்பாடல்தான்...
எத்தனை தரவை கேட்டிருக்கேன். சலிக்காத பாடல். இதே பாட்டை ஸ்ரேயா கோஷல் ஒரு மேடைல பாடினாங்க. உச்சரிப்பு கொஞ்சம் பிசகல். ஆனா நல்லா பாடினாங்க. அது கிடைக்கலியா உங்களுக்கு.
நல்ல சிலாகிப்பு :)
All time favourite song !!!
Thanks for extra bits.