"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்" - நெல்சன் மண்டேலா ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் சொன்னது.( தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியற் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை ஜேவிபி இனவாதக் கட்சிக்கு இதை மேற்கோளிட்டிருந்தார், நன்றி தமிழ் நேசன் தளம்)
ஜீலை 18, 1918 இல் பிறந்த ஆபிரிக்கச் சிங்கம் நெல்சன் மண்டேலாவுக்கு இன்றோடு வயது 90 ஆகின்றது. நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் 1990 இல் அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த போது தன் உடன்பிறப்புக்களுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்தினார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆனார். நோபல் கமிட்டி அவருக்கு சமாதான விருதைக் கொடுத்தது. ஒருகாலத்தில் ஒதுக்கிய தேசங்கள் சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்றன.இவரின் வாழ்வின் சரிதம் Long Walk to Freedom என்ற பெயரில் வடிக்கப்பட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா - சுதந்திரத்திற்கான விலையையும், உறுதியையும் கண் முன் காட்டி நிற்கும் சாட்சியம்.
"நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா,ஒரு சுதந்திர பூமி! இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன்,சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும் வரை,எனது போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான், மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின. ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!கறுப்பு காந்தி.
90 ஆவது பிறந்தநாளில் உங்களோடு சேர்ந்து நாங்களும் நினைத்துக் கொண்டோம். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி பிரபா.
Thanks . . .